நடுரோட்டில் காரை நிறுத்தி இளைஞரை அடித்தாரா சூர்யா?
சென்னை: சென்னையில் கார் – பைக் மோதிக் கொண்ட விவகாரத்தில், இருவருக்கு இடையே நடந்த சண்டையின்போது திடீரென குறுக்கிட்டு நடிகர் சூர்யா பைக்கில் வந்த வாலிபரை அடித்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்த வாலிபர் அடையாறு காவல் நிலையத்தில் சூர்யா மீது புகார் கொடுத்துள்ளார். ஆனால் தான் யாரையும் அடிக்கவில்லை என்று நடிகர் சூர்யா விளக்கியுள்ளார்.
சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் குமார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நண்பர் ஒருவருடன் நேற்று மாலை அடையாறு நோக்கிப் போயுள்ளார். அப்போது அடையாறு மேம்பாலத்தின் மீது பைக் போனபோது முன்னால் சென்ற கார் திடீரென பிரேக் போட்டு நின்றுள்ளது. இதை எதிர்பாராத பிரவீன் குமார் பைக்கை நிறுத்த முயன்றபோது அது முடியாமல் கார் மீது மோதி விட்டது.
இதையடுத்து காரை ஓட்டி வந்த பெண் காரை விட்டு இறங்கி பிரவீன்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. பிரவீன்குமாரும், அவரது நண்பரும் அவருடன் வாக்குவாதத்தில் இறங்கினர். இதனால் அங்கு கூட்டம் கூடியது. பரபரப்பு ஏற்பட்டது. அந்த சமயம் பார்த்து நடிகர் சூர்யா காரில் அப்பக்கமாக வந்துள்ளார்.
கூட்டத்தைப் பார்த்து காரை நிறுத்திய அவர் காரை விட்டு இறங்கி என்ன ஏது என்று விசாரித்துள்ளார். அப்போது பிரவீன் குமாரை அவர் பளார் என அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கீழே விழுந்து விட்டார். இதை பலர் செல்போனில் படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சூர்யா அங்கிருந்து கிளம்பிப் போய் விட்டதாக தெரிகிறது.
அடி வாங்கிய பிரவீன் குமார் மருத்துவமனைக்குப் போய் முதலுதவி எடுத்துக் கொண்டு நேராக சாஸ்திரி நகர் காவல் நிலையம் சென்று சூர்யா மீது புகார் கொடுத்துள்ளார்.
அதில், நடிகர் சூர்யா எந்தவித சம்பந்தமும் இல்லாமல் என்னை பொது இடத்தில் வைத்து தாக்கியதால், தனக்கு அவமானம் ஏற்பட்டு விட்டதாகவும், அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு நடிகர் சூர்யா தான் காரணம் என்றும் எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சூர்யா விளக்கம்
ஆனால் தான் பிரவீன் குமாரை அடிக்கவில்லை என்று சூர்யா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சென்னை அடையாறு அருகே காரில் சென்ற பெண்ணிடம் தகராறு செய்த இளைஞர்களை தட்டிக் கேட்டதாகவும், அந்த இளைஞர்களிடம் இருந்து பெண்ணை மீட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவத்தின்போது இளைஞர்களை தான் தாக்கவில்லை என்றும், கூட்டம் கூடியதால் அங்கிருந்து சென்றதாகவும் சூர்யா விளக்கியுள்ளார்.
எது உண்மை.. எது பொய்.. ?
Source: tamil.oneindia.com